FTC Presents.

Wow!

நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்

ஓர் பெயரைக் கேட்டவுடனேயே அந்தப் பெயரின் மொழி, இனம், நாடு என்ற மூன்றின் குறியீடாக அப்பெயர் விளங்குவதை உணர முடியும்.
அதனால் தமிழர்களாகிய நாம், தமிழிலேயே குழந்தைகளுக்கு பெயரிடுவது சிறந்தது. பிறமொழியாளர்களுடைய பெயர்களை குழந்தைக்கு வைப்பதால் தேசிய இனப் பண்பை அக்குழந்தை, பிறமொழியாளர்களிடம் இழந்துவிடும். பிற மொழியாளர்கள் தமிழகத்தை ஆண்ட காலங்களில் தமிழ்மொழியின்ஊடே பல பிறமொழிச் சொற்களும் பெயர்களும் புகுந்து கொண்டது. சோழர் காலத்திற்குப் பின்பு திட்டமிட்டு தமிழ்நாட்டு ஊர், பெயர்கள் வடமொழியாக்கம் செய்யப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் மூலம் தமிழர் தம் வரலாற்றையும், பண்டைய இலக்கியங்களையும் உணர்ந்ததால் தூய தமிழில் பெயரிடும் வழக்கம் தோன்றியது. தமிழ் சமூகத்தில் உயர் சாதியினர் மத்தியில் மட்டுமே வேற்று மொழியினர் பெயரை வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்த நேரங்களில்கூட, தாழ்த்தப்பட்டோர் என்றுமே தூய தமிழ் பெயர்களையே இன்றுவரை தமக்கு வைத்துக் கொள்வதைக் காணலாம்.
தமிழ் பேராசிரியரான சூரிய நாராயண சாஸ்திரியார், தம் பெயரை பரிதிமாற்கலைஞர் என்றும்; சுவாமி வேதாசலனார் - மறைமலையடிகள் என்றும்;சந்தோஷம்-மகிழ்நன் ஆனதும் பெரும் மாற்றத்தை படித்தோரிடம் கொண்டுவந்தது.
தனித்தமிழ்க் கழகம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், தமிழ் சங்கங்கள், புலவர் கல்லூரிகள், திராவிடக் கழகங்கள் மூலம் எண்ணற்றோர் தம்பெயரில் இருந்த வடமொழிப் பெயர்களைத் துறந்தனர். புதிய தமிழ் பெயரைப் பூண்டனர்.
தமிழர்கள் தன்னுணர்வு பெறுவதற்கு கட்டாயம் தமிழ்ப் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு வைப்பதன் மூலமே அதை அடைய இயலும்
- ப. சோழநாடன்